பீஜிங்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இந்த தொடக்க கட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறும்போது, ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சீனா கவலை கொள்கிறது. இது ஈரானின் அண்டை நாடுகளையும் பாதித்துள்ளது என கூறினார்.
வளைகுடா நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவையும் கூட முழு அளவில் மதிக்கப்பட வேண்டும் என சீனா நம்பிக்கை கொண்டுள்ளது என்றார்.
இந்த மோதல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் ஆகியவற்றை அடுத்து, ஈரானில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்களை நாங்கள் பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளோம் என்றும் நிங் குறிப்பிட்டார்.