உலக செய்திகள்

வளைகுடா போர் பதற்றம்; அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் இறக்குமதி அதிகரிப்பு

ஈரான்-அமெரிக்கா இடையிலான போரால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், வளைகுடா நாடுகளில் இருந்து விநியோகம் சரிந்துள்ளது.

புதுடெல்லி,

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் இறக்குமதி மற்றும் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதியை பெருமளவு அதிகரித்துள்ளது. சர்வதேச நிறுவனமான கெப்லர் நிறுவன தரவுகளின்படி, ஆகஸ்டு மாதத்தில் இதுவரை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 6 லட்சத்து 20 ஆயிரம் டன் சமையல் கியாசை இறக்குமதி செய்துள்ளது. ஜூலை மாதத்தில் இது 8 லட்சத்து 90 ஆயிரம் டன்னாக இருந்தது. இது இந்தியாவின் மொத்த சமையல் கியாஸ் இறக்குமதியில் 73 சதவீதத்திற்கும் அதிகமாகும்.  

ஈரான்-அமெரிக்கா இடையிலான போரால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், வளைகுடா நாடுகளில் இருந்து விநியோகம் சரிந்துள்ளது. ஆகஸ்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் டன்னும், கதாரில் இருந்து 60 ஆயிரம் டன்னும் மட்டுமே சமையல் கியாஸ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியா முற்றிலும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்திக்கொண்டது. இதனால் இந்தியாவுக்கான திரவ இயற்கை எரிவாயு இறக்குமதியிலும் அமெரிக்காவின் பங்கு அதிகரித்துள்ளது.  

ரஷியா தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகஸ்தராக நீடிக்கிறது. நடப்பு மாதத்தில் ரஷியாவிடம் இருந்து தினமும் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வெனிசுலாவிடம் இருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கச்சா எண்ணெய் விநியோகம் அதன் குழாய் வழித்தடங்கள் மூலம் சீராக உள்ளது. நீண்ட தூர பயணங்களால் சரக்கு கட்டணம் மற்றும் காப்பீட்டு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், எரிசக்தி பாதுகாப்பிற்காக இந்தியா கூடுதல் விலையை செலுத்தி விநியோகத்தை உறுதி செய்து வருகிறது.