உலக செய்திகள்

ஈரான் ராணுவ மந்திரியுடன் சந்திப்பு: மிகவும் பயனுள்ள சந்திப்பை நடத்தினேன் - ராஜ்நாத்சிங்

மாஸ்கோவில் இருந்து டெல்லி திரும்பும்வழியில், ஈரான் ராணுவ மந்திரியை ராஜ்நாத் சிங் சந்தித்து, பிராந்திய பாதுகாப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

டெக்ரான்,

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ மந்திரிகள் கூட்டத்தில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தின் இடையே அவர் ரஷியா, சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் ராணுவ மந்திரிகளை சந்தித்து பேசினார்.

அந்த கூட்டத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பும் வழியில் நேற்று முன்தினம் ராஜ்நாத் சிங், ஈரான் தலைநகர் டெக்ரான் வந்தடைந்தார்.

அங்கு அவர், அந்த நாட்டின் ராணுவ மந்திரி பிரிகேடியர் ஜெனரல் அமீர் ஹடாமி விருப்பப்படி அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள், பிராந்திய பாதுகாப்பு விஷயங்கள், ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், டெக்ரானில் ஈரான் ராணுவ மந்திரி பிரிகேடியர் ஜெனரல் அமீர் ஹடாமியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பை நடத்தினேன். நாங்கள் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு விஷயங்கள், இருதரப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங் அலுவலகம் வெளியிட்ட ஒரு பதிவில், இந்திய, ஈரான் ராணுவ மந்திரிகள் இரு தரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்து செல்வதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். இருவரின் சந்திப்பும் நல்ல, இதமான சூழலில் நடந்தது. மேலும் இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையேயான நெடுங்கால கலாசார, மொழியியல் மற்றும் நாகரிக உறவுகளை இரு தலைவர்களும் வலியுறுத்தினர் என கூறப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ மந்திரிகள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங், பாரசீக வளைகுடாவின் நிலைமை குறித்து இந்தியாவின் ஆழ்ந்த அக்கறைக்கு குரல் கொடுத்தார்; இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை பரஸ்பர மரியாதை அடிப்படையிலான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள அழைப்பும் விடுத்தார். இந்த சூழலில், அவர் டெக்ரான் வந்து ஈரான் ராணுவ மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஈரான் சமீபத்தில் சீனாவுடன் ஒரு மெகா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் கூட, டெக்ரானும், டெல்லியும் இரு தரப்பு நட்புறவு அடிப்படையில் அமைந்துள்ள சபாஹர் துறைமுகங்களில் தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றன. மேலும், இரு தரப்பு வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கான முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தின் முடிவை விரைவுபடுத்தவும் முயற்சிக்கின்றன.

மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான், யுரேசியா ஆகியவற்றுடன் இந்தியாவின் நுழைவாயிலாக ஈரான் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.