கொழும்பு,
இந்தியா - இலங்கை உறவு இதயங்கள் மற்றும் ஆன்மாக்களின் பிணைப்பைப் போன்றது என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
3 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், இன்று தலைநகர் கொழும்பில் அதிபர் அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியாவுக்கு உள்ள ஆர்வத்தை ராஜ்நாத் சிங் தெரிவித்தார்
அவர் தனது உரையில், “இலங்கையின் கடினமான காலங்களில் இந்தியா எப்போதும் முதல் நிலையில் நின்று உதவி வருகிறது. இலங்கையில் உள்ள எங்கள் நண்பர்களுடன் நாங்கள் தொடர்ந்து தோளோடு தோள் நின்று செயல்படுவோம். உண்மையான நண்பர்கள் இன்ப துன்ப காலங்களில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்பார்கள் என்பதில் நாங்கள் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது உறவு இதயங்கள் மற்றும் ஆன்மாக்களின் பிணைப்பைப் போன்றது என்றார்.
இலங்கை அதிபருடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கொழும்பில் இன்றைய தினம் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க உடன் மிகவும் ஆக்கபூர்வமான சந்திப்பினை மேற்கொண்டிருந்தேன். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை அவருடன் பகிர்ந்துகொண்டதுடன், அவரது அரசாங்கம் இரண்டு வருடங்களை நிறைவு செய்தமையையிட்டு அவருக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.