இஸ்லாமாபாத்,
லஷ்கர்இதொய்பா, ஜமாத்உத்தவா என்ற பெயர்களில் அமைப்புகளை நிறுவி, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருபவன் ஹபீஸ் சயீத். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட இவனை இந்தியா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அமெரிக்காவும் அவனுடைய தலைக்கு விலை வைத்து உள்ளது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சி அமைந்த பின்னர், இந்தியாவின் நெருக்கடிக்கு அஞ்சிய பாகிஸ்தான் ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடைய கூட்டளிகளை வீட்டுக்காவலில் வைத்தது.
பாகிஸ்தான் அரசியலில் குளறுபடி ஏற்பட்ட போது வீட்டுக்காவலில் இருந்த ஹபீஸ் சயீத் அரசியல் கட்சியை தொடங்கினான். அமெரிக்கா, இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவன் பாகிஸ்தானில் அரசியல் கட்சியை தொடங்கியது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பயங்கரவாத இயக்கமான ஜமாத் உத் தவா இயக்கத்தை மில்லி முஸ்லீம் லீக் பாகிஸ்தான் என அரசியல் கட்சியாக்கி உள்ளான். பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு அந்நாட்டு ராணுவம் மற்றும் உளவு அமைப்பு உதவியாக உள்ளது.
ஹபீஸ் சயீத் மில்லி முஸ்லிம் லீக் கட்சியை தொடங்கியது அமெரிக்காவிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கட்சிக்கு அரசியல் கட்சியென அங்கீகாரம் வழங்க தேர்தல் ஆணையத்தில் பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்தது. பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் இருந்துக் கொண்டு இந்தியாவில் பல்வேறு தாக்குதலை முன்னெடுத்து வருகின்றான். ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என அந்நாட்டு அரசு கோர்ட்டையும் நாடி உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அரசியல் கட்சி அலுவலகம் திறந்து உள்ளான் என செய்தி வெளியாகி உள்ளது.