உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் கூட்டாளி சுட்டுக்கொலை

மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்.

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் முக்கிய கூட்டாளியான ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் கொல்லப்பட்டார். கைபர் பக்துன்வா மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

லஷ்கர் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்தல் மற்றும் ஒருங்கிணைப்பு பகுதிகளில் முக்கிய பங்கை ஷேக் யூசுப் அப்ரிடி வகித்துள்ளார். கடந்த வாரம் லஷ்கர் அமைப்பின் அமீர் ஹம்சா துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த நிலையில், தற்போது யூசுப் அப்ரிடி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

யூசுப் அப்ரிடி கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குற்றவாளிகளை கண்டறியக்கோரி போராட்டமும் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள லாகூர் துணைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.