காசா மக்கள் 
உலக செய்திகள்

பசியின் பிடியில் 5 லட்சம் காசா மக்கள்; நிதி பற்றாக்குறையால் உணவு உதவி நிறுத்தம்

காசாவில் தினமும் வழங்கப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் சூடான உணவு பொட்டலங்களின் எண்ணிக்கை, தற்போது 1 லட்சத்து 50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

லண்டன் ,

நிதிப் பற்றாக்குறையால் காசாவில் உள்ள 5 லட்சம் மக்களுக்கான உணவு உதவியை ஐநா நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா முனையில், லட்சக்கணக்கான மக்கள் ஐநா சபையின் உணவு உதவிகளை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், காசா மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் ஐநா சபையின் உலக உணவுத் திட்டம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

16 லட்சத்தில் இருந்து குறைப்பு

காசா பகுதியில் நிலவி வரும் கடுமையான நிதி பற்றாக்குறை காரணமாக, அங்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உணவு உதவியில் பெரும் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காசாவில் சுமார் 5 லட்சம் மக்களுக்கான மாதாந்திர உணவு உதவி இந்த மாதம் முதல் முழுமையாக நிறுத்தப்படுகிறது.

அவசர உதவிகள்

இதுவரை காசாவில் மாதாந்திர உணவு உதவி பெற்று வந்தோரின் எண்ணிக்கை 16 லட்சமாக இருந்தது. தற்போது நிதி நெருக்கடியால் இந்த எண்ணிக்கை 11 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, அங்குள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கான அவசர உதவிகள் முடக்கப்பட்டுள்ளன.

நெருக்கடி தீவிரமடையும்

உணவு உதவி நிறுத்தப்பட்டுள்ளதை தவிர, அங்கு சமைத்த உணவுகள் வழங்கும் திட்டமும் குறைக்கப்பட்டுள்ளது. தினமும் வழங்கப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் சூடான உணவு பொட்டலங்களின் எண்ணிக்கை, தற்போது 1 லட்சத்து 50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. தொலைதூர பகுதிகளில் உள்ள மக்களுக்கு தினமும் உணவு வழங்குவதற்கு பதிலாக, மாற்று நாட்களில் மட்டுமே உணவு வழங்க முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளிடம் இருந்து அவசர நிதியுதவி உடனடியாக கிடைக்காவிட்டால், காசாவில் பசி மற்றும் பட்டினி நெருக்கடி மேலும் தீவிரமடைந்து பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT