கொழும்பு,
இலங்கையில் கடந்த ஓராண்டு காலமாக, பெரும்பான்மையினரான புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை இனத்தவராகிய இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் புத்த மதத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மியான்மரில் புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உள்ள நிலையில், ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கையில் தஞ்சம் அடைவதற்கு புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்களை தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது.
இதன்காரணமாக தெல் தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதே போன்று பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து உள்ளன. இது சிறிசேனா அரசுக்கு தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது.
இரு மதத்தினருக்கும் இடையேயான மோதலில் மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் மசூதிகள் மற்றும் அவர்களுக்கு உரிய நூற்றுக்கணக்கான பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து முகநூல், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக வலைதளங்கள் ஆகியவை முடக்கப்பட்டன. தாக்குதல் சம்பவத்தினை அடுத்து மஹாசன் பலகயா என்ற சிங்கள புத்த அமைப்பின் மூத்த தலைவர் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மஹாசன் பலகயா என்ற அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு உணர்வுடன் பேசிய வீடியோக்களை வெளியிட்டது.
இந்த நிலையில் இந்த அமைப்பின் செய்தி தொடர்பு அதிகாரியொருவர், இலங்கையில் அனுராதபுராவின் வடமத்திய நகரில் இன்று பேசும்பொழுது, ஒவ்வோர் இனமும் ஓர் அரசியல் கட்சியை கொண்டிருக்கிறது. சிங்களர்களுக்கு என ஓர் அரசியல் கட்சி இல்லை.
நாங்கள் மஹாசன் பலகயா மற்றும் பல்வேறு சிங்கள அமைப்புகளுடன் சேர்ந்து புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.