ஹொனோலுலு
ஹவாய் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையில் இருந்து 500 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு வெடித்து சிதறுகிறது.
ஹவாய் தீவு எனப்படும் பிக் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையானது, உலகின் மிக துடிப்பான எரிமலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த எரிமலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவு 7.10 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 7 மணிநேரம் நடந்த இந்த எரிமலை வெடிப்பானது, நேற்று காலை 2.36 மணி வரை நீடித்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.
சுமார் 500 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு பீறிட்டு வெளியேறுகிறது. இதனால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த வெடிப்பில், வாயு மற்றும் தீப்பிழம்புகள் வெளிப்பட்டன. எரிமலையின் வடக்கு பகுதியில் இருந்து வெளிப்பட்ட எரிமலை குழம்பு விரைவாக வெளியேறி எரிமலை பள்ளத்தில் 50 சதவீதம் அளவுக்கு நிரம்பி காணப்படுகிறது. அதனால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் சாம்பல் கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே எழும்பியது.
எனினும் இந்த எரிமலை வெடிப்பின்போது, மக்கள் அதிகம் கூட கூடிய பகுதிகளில், பெரிய திடப்பாறைகளோ அல்லது மக்மா துகள்களோ வெளியேறவில்லை என்றும் ஆனால் சாம்பல் படிவங்கள் கண்டறியப்பட்டு உள்ளன என்றும் தகவல் தெரிவிக்கின்றது.