ரியாத்,
சவுதி அரேபியாவில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினர்.
ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, ஏமனில் உள்நாட்டுப்போர் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. அரசுப்படையினரும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலின்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த புதன்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் விமான கேப்டன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தினர். விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக சவுதி ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.