உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை, டிரோன் தாக்குதல்

அது தொடர்பான அறிக்கையில் தங்களுடைய 2-வது தாக்குதல் வெற்றியடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

சனா

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. இடையில் ஹமாஸ் அமைப்பும் தாக்குதலை தொடுத்தது. அந்த அமைப்பு மீதும் இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த சூழலுக்கு இடையே, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து அதிகரிக்கும் என்றால், நாங்கள் நேரடியாக ராணுவ மோதலில் ஈடுபட தயாராக இருக்கிறோம் என்று ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, ஏமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் உறுதிபடுத்தினர்.

இந்த சூழலில் இஸ்ரேலுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை, டிரோன் கொண்டு இன்று தாக்குதல் நடத்தி உள்ளனர். தங்களுடைய 2-வது தாக்குதல் வெற்றியடைந்து உள்ளது என அதுபற்றி அறிக்கையும் வெளியிடப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளரான யாஹியா சரீ வெளியிட்ட செய்தியில், ஈரானின் சகோதரர்கள் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நடத்தும் போரில் அவர்களுடன் சேர்ந்து இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. எங்களுடைய நோக்கங்கள் நிறைவேறும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.