உலக செய்திகள்

சவுதி அரேபியாவின் எப் 15 ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீடியோ வெளியீடு

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறினாலும், சவுதி அரேபியா இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

சனா:

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி படையினர், சவுதி அரேபியாவின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமானம் தீப்பற்றி எரியும் காட்சிகள் மற்றும் அதன் சிதைந்த பாகங்களை காட்டும் காணொலியையும் ஹவுதிகள் வெளியிட்டுள்ளனர்.ஏமனின் மரீப் மாகாணத்தின் வான்பரப்பில், சவுதி ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அந்த போர் விமானம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தாக்கியதாக ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான்-வழி ஏவுகணையை பயன்படுத்தி எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளனர்.

பாலைவனப் பகுதி

ஹவுதிகள் வெளியிட்டுள்ள சுமார் 4 நிமிட காணொலியில், வானில் விமானத்தை குறிவைத்து தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் இரவு நேரத்தில் தரையில் விமானத்தின் சிதைவுகள் தீப்பற்றி எரியும் காட்சிகளும், பாலைவனப் பகுதியில் கிடக்கும் கருகிய பாகங்களும் இடம் பெற்றுள்ளன. விமானத்தில் சேத பகுதிகளில் சவுதி அரேபிய கொடியின் அடையாளம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், காணொலியில் இடம்பெறும் விமானத்தின் வகையை அதன் சேதம் காரணமாக உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவுதி உறுதிப்படுத்தவில்லை

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறினாலும், சவுதி அரேபியா இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனவே, சவுதி எப்-15 விமானம் உண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை.இதற்கிடையே, சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் ஹவுதி இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ஹவுதிகள் சவுதி பகுதிகளை நோக்கி ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT