உலக செய்திகள்

’ஹவுதிகள் பயங்கரவாதிகள்’ - சவுதி மன்னர்

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ரியாத்,

’ஹவுதிகள் பயங்கரவாதிகள்’ என்று சவுதி மன்னர் தெரிவித்துள்ளார்.

ஏமன் உள்நாட்டுப்போர்

ஏமனில் ஹவுதி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஏமன் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.

ஏமன் தலைநகர் சனா உள்பட பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலை தொடர்ந்து ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது. ஏமன் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் தீவிரமடைந்து வருகிறது.

சவுதி மீது ஹவுதிகள் தாக்குதல்

ஏமன் அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். மேலும், சவுதி அரேபியா மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களுக்குமுன் இஸ்லாமிய மதத்தினரின் முக்கிய வழிபாட்டு தலமாக திகழும் மெக்கா மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த டிரோன், ஏவுகணைகளை மெக்கா வான்பரப்பில் சவுதி வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதல் முயற்சி மத்திய கிழக்கில் பெரும் அதிவலைகளை ஏற்படுத்திய நிலையில் ஹவுதிகள் மீதான தாக்குதலை ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதி படையினரும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஹவுதிகள் பயங்கரவாதிகள்

இந்நிலையில், ஹவுதிகள் பயங்கரவாதிகள் என்று சவுதி அரேபிய மன்னர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெற்ற அந்நாட்டு மந்திரி சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மன்னர் சல்மான் பின் அப்துல்லாசி அல் சத் (வயது 90), ஹவுதிகள் பயங்கரவாதிகள்... உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மதத்தினரை தூண்டும் வகையில் மெக்காவை குறிவைத்து ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சித்தது கண்டனத்திற்குரியது. தாக்குதலை முறியடித்த சவுதி பாதுகாப்புப்படையினரை வாழ்த்துவதாக சவுதி மன்னர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT