உலக செய்திகள்

பிரம்மாண்ட ஒப்பந்தம்: அமெரிக்காவின் எரிசக்தி துறையில் கால்பதிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

இந்தியாவின் ரிலையன்ஸ் முதலீட்டில் அமெரிக்காவில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் புதிய சுத்திகரிப்பு ஆலை அமையவுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலை தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரவுன்ஸ்வில் இந்த ஆலை அமையவுள்ளது. இந்த பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீடு செய்வதற்காக டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஷேல் நிறுவனம் எண்ணெயை 100 சதவீதம் சுத்திகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இதுவே உலகின் "மிக பெரிய தூய்மையான சுத்திகரிப்பு ஆலையாக இருக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல்கள் காரணமாக விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் இருக்கும் சூழலில், அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு செய்வது அந்த நிறுவனத்திற்கு நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வழங்கும் என்று தெரிவித்தார்.

“அமெரிக்கா முதலில், எப்போதும்” என்ற முழக்கத்திற்கு ஏற்ப, அமெரிக்காவை உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நாடாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் இறுதி இலக்கு என டிரம்ப் கூறினார்.

இது தொடர்பாக, அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தினர் கூறியதாவது:-

“அமெரிக்காவில் 132 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ஒரு நாளைக்கு சுமார் 18.4 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தி செய்யும் கொள்ளளவை உடையது. இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் பெரும்பாலானவை பல ஆண்டுகளுக்கு முன்பே உருவக்கப்பட்டது. இன்று அமெரிக்க ஷேல் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் இலகுவான கச்சா எண்ணெய்க்கு பதிலாக, கனமான, அதிக அடர்த்தி கொண்ட கச்சா எண்ணெய்களை, குறிப்பாக வெனிசுலா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து வரும் எண்ணெய்களைப் பதப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.”

இவ்வாறு நிர்வாகத்தினர் கூறினர்.