லண்டன்,
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்குப் பெரிய லாரிகளின் பின்புறத்தில் மனிதர்களைப் பதுக்கி வைத்துச் சட்டவிரோதமாகக் கடத்தும் கும்பல் ஒன்று இயங்கி வந்தது. கடந்த 2024-ம் ஆண்டு லாரி ஒன்றில் 11 இந்தியர்கள் ரகசியமாக பதுங்கியிருந்தபோது இங்கிலாந்து அதிகாரிகளிடம் சிக்கினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இங்கிலாந்தில் வசிக்கும் ஜஸ்கிரத் சிங் (வயது 25) என்ற இந்திய வாலிபர்தான் இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பது வெளிவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கடந்த ஆண்டு கைது செய்து அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து சோதித்தனர்.
அதில் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிக் டாக் பதிவுகளும், பணத்தை படுக்கையில் குவித்து வைத்திருந்த வீடியோக்களும் சிக்கின. இந்த மனிதக் கடத்தல் மூலம் அவர் பல கோடி ரூபாய் சம்பாதித்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்த வழக்கை விசாரித்து வந்த இங்கிலாந்து கோர்ட்டு ஜஸ்கிரத் சிங்கிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.