எவரெஸ்ட் பணிப்பாறை- மனித சிறுநீர் 
உலக செய்திகள்

பனிப்பாறைகள் உருக மனித சிறுநீர் காரணமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

மனித உடலில் இருந்து சுமார் 37°C வெப்பநிலையில் வெளியேறும் இந்த சிறுநீர், பனியை நேரடியாக உருக்குகிறது.

காத்மாண்டு,

எவரெஸ்ட் சிகரத்தின் பனிப்பாறைகள் உருகுவதற்கு முக்கிய காரணம் மனித சிறுநீர் தான் என்று புதிய ஆய்வுகள் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

பனிப்பாறை உருக மனித சிறுநீர் தான் காரணம்

எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்பகுதி முகாமில் தங்கும் மலையேறிகளின் சிறுநீர் கழிப்பு மற்றும் இதர மனிதச் செயல்பாடுகளால் வெளியாகும் வெப்பம், அங்குள்ள பனிப்பாறைகளை அதிவேகமாக உருகச் செய்து வருவதாக புதிய ஆய்வொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அறிவியல் இதழான "வட்டார சுற்றுச்சூழல் மாற்றம்" வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, உலகளாவிய பருவநிலை மாற்றமே எவரெஸ்ட் பனி உருகுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தாலும், உள்ளூர் அளவில் பனிப்பாறைகள் வேகமாகச் சரிவதற்கு மனிதச் சிறுநீரும் ஒரு முக்கியக் காரணியாக மாறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தினமும் 6,000 லிட்டர் சிறுநீர்

எவரெஸ்ட் சிகரத்தின் மிக உயரமான பகுதிகளில் உடல் வறட்சியைத் தவிர்க்க மலையேறிகளும் அவர்களது வழிகாட்டிகளும் அதிக அளவில் தண்ணீர் குடிக்கின்றனர். இதன் காரணமாக, ஒரு மலையேற்ற காலத்தில் அங்கு தங்குபவர்கள் மூலமாக மட்டும் தினமும் சராசரியாக 6,000 லிட்டருக்கும் அதிகமான சிறுநீர் கழிக்கப்படுகிறது.

மனிதர்களின் திடக்கழிவுகள் (மலம்) பேரல்களில் சேகரிக்கப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டாலும், பெரும்பாலான சிறுநீர் நேரடியாக அங்கிருக்கும் கும்பு பனிப்பாறையின் மீதே கழிக்கப்படுகிறது. மனித உடலில் இருந்து சுமார் 37°C வெப்பநிலையில் வெளியேறும் இந்த சிறுநீர், பனியை நேரடியாக உருக்குகிறது. இதன் மூலம் மட்டும் ஒவ்வொரு மலையேற்றக் காலத்திலும் சுமார் 154 டன் பனி உருகுவதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

தீவிரமடையும் உள்ளூர் வெப்பம்

அடிப்படை முகாமில் மனித செயல்பாடுகளால் ஏற்படும் பனி உருகுதலில் சிறுநீர் கழிப்பு 6% பங்களிப்பை அளிக்கிறது. எஞ்சிய 94% பாதிப்பு அங்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்களால் ஏற்படுகிறது. மலையேறிகளின் சமையல், மின்சாரம் மற்றும் வெப்ப வசதிக்காக பல்லாயிரக்கணக்கான லிட்டர் மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் எல்.பி.ஜி சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வெளியாகும் ஒட்டுமொத்த வெப்ப ஆற்றலானது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,500 டன் பனி மற்றும் பனிப்பாறைகளை உருக்குவதற்கு போதுமானது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

2 மடங்கு வேகத்தில் உயரும் வெப்பநிலை

கடந்த 1991 முதல் 2023 வரையிலான 32 ஆண்டுகால செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததில், எவரெஸ்ட் அடிப்படை முகாமின் மேற்பரப்பு வெப்பநிலை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.28°C உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இது அதை சுற்றியுள்ள பிற பனிப்பாறைப் பகுதிகளை விட இரண்டு மடங்கு வேகமான வெப்பநிலை உயர்வாகும்.

முகாமை மாற்ற பரிந்துரை

தற்போதுள்ள எவரெஸ்ட் அடிப்படை முகாம் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பலவீனமடைந்து வருவதால், கும்பு பனிப்பாறையை பாதுகாக்கும் நோக்கில், இந்த பேஸ் கேம்பை பனிப்பாறைகள் இல்லாத, சற்று தொலைவில் உள்ள பாதுகாப்பான மற்றும் நிலையான பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் நேபாள அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT