Photo Credit: AP 
உலக செய்திகள்

ஈரானில் அயதுல்லா அலி கமெனி உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி

அயதுல்லா அலி கமெனிக்கு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கான சடங்கு அதிகாரப்பூர்வமாக இன்று அதிகாலை தொடங்கியது

கடந்த பிப்ரவரி 28-ந் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். போர் காரணமாக அவரது உடல் அடக்கம் உடனடியாக நடைபெறவில்லை. தற்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் அயதுல்லா அலி கமெனியின் உடல் அடக்கத்துக்கான இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இன்று தொடங்கி 6 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வருகிற 9-ந்தேதி அவரது உடல், ஈரானின் வடகிழக்கு புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

நேற்று அயதுல்லா அலி கமெனியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி, தலைநகர் தெக்ரானில் உள்ள மொசல்லா பெரிய மசூதியில் வைக்கப்பட்டது. அந்த சவப்பெட்டி, ஈரான் கொடியால் போர்த்தப்பட்டிருந்தது. மேலும், தாக்குதலில் உயிரிழந்த அவரது ஒரு வயது பேத்தியின் உடல் இருந்த சவப்பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அயதுல்லா அலி கமெனியின் உடலுக்கு ஈரான் உயர்மட்ட தலைவர்கள், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.அப்போது முகமது பாகர் காலிபாப் உள்ளிட்ட பலர் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும், அயதுல்லா அலி கமெனியின் உடலுக்கு இந்தியா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி பவித்ரா மார்கெரிட்டா, பீகார் கவர்னர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தங்களது மரியாதையை செலுத்தினர்.அதேபோல் காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெஹ்பூபா முப்தி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலி

இந்த நிலையில் அயதுல்லா அலி கமெனிக்கு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கான சடங்கு அதிகாரப்பூர்வமாக இன்று அதிகாலை தொடங்கியது. அவரது உடல் வைக்கப்பட்டுள்ள மொசல்லா பெரிய மசூதியின் வாயில்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அஞ்சலி செலுத்துவதற்காக மசூதி முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அவர்களுக்கு இன்று அதிகாலை அனுமதி அளிக்கப்பட்டதும் வரிசையாகச் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் தலைநகர் தெக்ரானுக்கு வந்து வண்ணம் உள்ளனர். அயதுல்லா அலி கமெனிக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.6-ந்தேதி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதனால் லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அயதுல்லா அலி கமெனிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது மகன் மொஜ்தபா கமெனி, தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பாதுகாப்பு காரணங்களாலும், இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் காரணமாகவும் பங்கேற்கவில்லை.