ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதனால் மத்திய கிழக்கில் போர்மேகம் சூழ்ந்தது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. போரின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பித்தது
இரு நாடுகளுக்கும் இடையே 2 மாத கால போர்நிறுத்தமும் அமலில் உள்ளது. அதே சமயத்தில், போர்நிறுத்தத்தை மீறி, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக, லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இருந்து விலகி விடுவோம் என்று எச்ரிக்கை விடுத்தது.
இஸ்ரேல் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடிந்து கொண்டார். இதற்கிடையே, ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுதான் தூண்டியதாக கருத்துகள் பரவிய நிலையில், அதனை டிரம்ப் மறுத்துள்ளார். இது குறித்து டிரம்ப் கூறியதாவது: ஈரானுக்கு எதிராக போர் தொடுக்கும் முடிவு, முற்றிலும் என்னுடையதே. யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் அந்த முடிவை எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.