உலக செய்திகள்

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: எப்ஸ்டீன் விவகாரம் குறித்து பில்கேட்ஸ் விளக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து எப்ஸ்டீன் கோப்புகளில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

அமெரிக்காவில் பெரிய அளவில் பேசப்படும் பொருளாக ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் வங்கிகளில் இருந்து பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு பணம் வாங்கி வழங்கும் பணியை மேற்கொண்டார். இதனால் அவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் நல்ல உறவு இருந்தது. இந்நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. அவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து பல பிரபலங்களுக்கு தாரை வார்த்ததாக கூறப்படுகிறது. இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சர்ச்சைக்குரிய கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை அண்மையில் லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூயார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து கோப்புகளில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

Also read:பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட பில்கேட்ஸ்: எப்ஸ்டீன் கோப்புகளில் பகீர் தகவல்

கடந்த ஜூலை 18, 2013 தேதியிட்ட மின்னஞ்சலில், “ரஷிய பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதால் பில் கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோயை குணப்படுத்தும் மருந்தை அப்போதைய மனைவி மெலிண்டாவுக்கு தெரியாமல் அனுப்புமாறு பில் கேட்ஸ் கூறினார். மெலிண்டாவுக்கும் பால்வினை நோய்த் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில், அவருக்கு தெரியாமலேயே உணவில் மருந்தை கலக்க என்னிடம் உதவி கோரினார்” என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார். பில் கேட்ஸ் குறித்த இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இது தொடர்பாக பில் கேட்ஸ் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: “எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற மின்னஞ்சலை நான் ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த மின்னஞ்சல் போலியானது. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் என் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு முதல்முறையாக எப்ஸ்டீனைச் சந்தித்தேன். அதன்பிறகு மூன்று ஆண்டுகளில் பலமுறை அவருடன் இரவு விருந்தில் கலந்துகொண்டேன். ஆனால், அவருடைய கரீபியன் தீவுக்கு ஒருபோதும் சென்றதில்லை; பெண்களுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை. எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.