வாஷிங்டன்,
அமெரிக்கா பணி விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப் வழங்குவதை தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம். நிறுத்த முடிவெடுத்துள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் விசா கெடுபிடிகளால் அங்கு இயங்கி வரும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை சார்ந்திருப்பதில் பெரும் அழுத்தங்களை சந்தித்து வருகின்றன.
இந்த சூழலில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம்., 1,50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனது மிகப்பெரிய பிரிவான கல்சல்டிங் வணிகத்தில் உள்ள பெரும்பாலான பதவிகளுக்கு அமெரிக்க விசா மற்றும் கிரீன்கார்டு பெறுவதை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, ஐ.பி.எம். கன்சல்டிங் நிறுவனம் அமெரிக்காவின் உயர்திறன் விசா திட்டங்களில் பங்கேற்கிறது. அந்தப் பங்கேற்பு பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது.
மேலும் திறன் கிடைப்புத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் தேவைகள் மாறி வந்துள்ளதால், ஐ.பி.எம். கன்சல்டிங்கில் உள்ள அத்தகைய பெரும்பாலான பதவிகளுக்கான விசா மற்றும் கிரீன் கார்டு ஆதரவை நிறுத்த முடிவு செய்துள்ளோம்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஐ.பி.எம். நிறுவனத்தின் இந்த முடிவால், மேற்படி பிரிவில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.