பெய்ரூட்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
எனினும், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில் மக்கள் பலர் பலியானார்கள். உடனடியாக போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரேலிடம் லெபனான் கோரி வந்தது.
இந்த நிலையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, பெரிய அளவில் தீர்வு ஒன்று ஏற்படுவதற்கான நடவடிக்கையாக, இரு தலைவர்களும் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.
தீவிர ராஜதந்திர முயற்சிகளின் விளைவாக இது ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது என்றும் இதன்படி, 10 நாள் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதுபற்றி ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் இன்று கூறும்போது, அமைதி ஏற்பட வேண்டும் என்றால் அது இரு தரப்பிலும் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். வான், நிலம் மற்றும் கடல் வழியேயான தாக்குதல் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் 10 நாள் போர் தொடரும் என்றார்.
லெபனான் பிராந்தியத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுவதும் வாபஸ் பெறப்பட வேண்டும். சிறை கைதிகள் விடுவிப்பு, எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடியிருப்புவாசிகள் திரும்புவது உள்ளிட்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
இறுதி கட்டத்தில், அரபு நாடுகளின் ஆதரவுடன் மறுகட்டமைப்பு முயற்சிகளும் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போர்நிறுத்த உடன்பாடு என்றால் அனைத்து வித போர் நடவடிக்கைகளும் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அர்த்தம். விதிமீறல்களில் ஈடுபட்டால் அதற்கேற்ப, களத்தில் தயாராக இருக்கும் எங்களுடைய போர் தடுப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டு பதிலடி தருவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஏனெனில், இந்த எதிரியை நாங்கள் நம்பவில்லை. போர்நிறுத்த உடன்பாடு என்பது எங்களுடைய தரப்பில் இருந்து என்று மட்டுமில்லாமல் இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று காசிம் கூறினார்.