உலக செய்திகள்

‘ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் அமெரிக்காவும் தீப்பற்றி எரியும்’ - டொனால்டு டிரம்ப்

நாட்டைப் பேரழிவில் இருந்து காப்பாற்ற குடியரசு கட்சிக்கு அமெரிக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மிக முக்கிய இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கன்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார்.

பிரான்ஸ் கலவரம்

அப்போது அவர் தனது தலைமையிலான குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்றால் பிரான்ஸ் போல் அமெரிக்காவும் தீப்பிடித்து எரியும் என்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஐரோப்பிய நாடான பிரான்சில் தற்போது கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் தவறான குடியேற்றக் கொள்கைகளால் மக்கள், இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர். அங்கு நடக்கும் வன்முறை கலவரங்களையும், தீப்பற்றி எரியும் கட்டிடங்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள். அங்கு நிலைமை மிகவும் மோசமானதாக மாறியுள்ளது" என்றார்.

அமெரிக்காவும் தீப்பற்றி எரியும்

மேலும் அவர், "இந்த இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சித் தோற்று எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் நிலையும் பிரான்ஸ் நாட்டைப் போல் மோசமாக மாறிவிடும். அமெரிக்காவும் தீப்பற்றி எரியும் சூழ்நிலை உருவாகும். ஜனநாயக கட்சியினர் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக எல்லையற்ற குடியேற்றங்களை ஆதரிக்கிறார்கள்.

இது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். நாட்டைப் பேரழிவில் இருந்து காப்பாற்றவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் பொதுமக்கள் அனைவரும் குடியரசுக் கட்சிக்குப் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

எதிர்ப்பு

டிரம்பின் இந்த அதிரடிப் பேச்சுக்கு எதிர்க்கட்சியான, ஜனநாயக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டிரம்ப் தோல்வி பயத்தில் வாக்காளர்களை அச்சுறுத்தி, வதந்திகளைப் பரப்புவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உள்நாட்டு பணவீக்கம் மற்றும் ஈரான் உட னான போர் பதற்றம் ஆகியவற்றுக்கு மத்தியில், டிரம்ப் ஆற்றிய இந்த ஆவேசப் பேச்சு உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT