உலக செய்திகள்

‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழக அரசு உயர்த்தினால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம்' - கேரளா எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணை இதுவரை ஒரு அடிப்படை பாதுகாப்பு தணிக்கை கூட நடத்தப்படவில்லை என கேரள மந்திரி மான்ஸ் ஜோசப் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த முக்கிய உத்தரவுகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று கேரள நீர்வளத்துறை மந்திரி மான்ஸ் ஜோசப் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு தனது பட்ஜெட்டில் நேற்று அறிவித்தது. இதற்கு கேரள மாநிலத்தின் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இது குறித்து கேரள அரசின் நீர்வளத்துறை மந்திரி மான்ஸ் ஜோசப் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

“முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எந்த சூழலிலும் 142 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் கேரள அரசு உறுதியாக உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த கேரளா ஒருபோதும் அனுமதிக்காது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த மிகுந்த கவலைக்குரிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் முல்லைப் பெரியாறு அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பே நடந்திருக்க வேண்டும். இருப்பினும், இதுவரை ஒரு அடிப்படை பாதுகாப்பு தணிக்கை கூட நடத்தப்படவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பாதுகாப்பு ஆய்வு மற்றும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் கூட இன்னும் முழுமையடையாத நிலையில், தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இரு மாநிலங்களுக்கும் ஏற்புடைய நிலைப்பாடுகளை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலித்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே கேரளாவின் நிலைப்பாடு. தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முயற்சித்தால், கேரளா சுப்ரீம் கோர்ட்டை நாடும். கேரளாவின் நலன்களை மாநில அரசு உறுதியாகப் பாதுகாக்கும்.

முல்லைப் பெரியாறில் புதிய அணையைக் கட்டுவதே எங்களின் அடிப்படைத் கோரிக்கையாக தொடர்ந்து வருகிறது. கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், தமிழ்நாட்டிற்குத் தேவையான நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பரஸ்பர உடன்பாட்டின் மூலம் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதுவே மாநிலத்தின் நிலையான நிலைப்பாடாகும்.

தமிழ்நாடு-கேரளா இடையிலான உறவில், கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை. அந்த காலகட்டத்தில் ஏதேனும் முக்கிய முடிவு கூட எடுக்கப்படவில்லை. உறவுகள் இருந்திருக்கலாம், ஆனால் நடைமுறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.