உலக செய்திகள்

உக்ரைன் போரின் தாக்கம் பறவைகளுக்கும்: பைபர்-ஆப்டிக் கேபிள்களால் கூடுகட்டும் அவலம்

போர் தீவிரமாக நடைபெற்று வரும் பகுதிகளில் இருக்கும் பறவை கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்

கீவ்,

உக்ரைனில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போர், மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், அங்குள்ள பறவைகளின் இயற்கை வாழ்விடத்தையும் பாதித்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பைபர்-ஆப்டிக்

போர் தீவிரமாக நடைபெற்று வரும் பகுதிகளில் இருக்கும் இரண்டு பறவை கூடுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அவை புல் மற்றும் பைபர்-ஆப்டிக் கேபிள்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மின்னணு ஜாமிங் (Electronic Jamming) தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வகையில், வான்வழி தாக்குதல் டிரோன்களை இயக்குவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவங்கள் பைபர்-ஆப்டிக் கேபிள்களை பரவலாக பயன்படுத்தி வருகின்றன. போரின் போது அறுந்து சிதறிக்கிடக்கும் இந்த கேபிள்களையே பறவைகள் தற்போது கூடுகட்டும் பொருட்களாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

வாழ்வியல் மாற்றம்

இது, போரால் இயற்கைச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், சுற்றுச்சூழல் அமைப்பில் உருவாகி வரும் பாதிப்புகளையும் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். போர் மனித உயிர்களையும் கட்டமைப்புகளையும் மட்டுமின்றி, வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் இயற்கையான வாழ்வியலையும் மாற்றி வருவது கவலைக்குரியதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.