உலக செய்திகள்

அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள்

அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்ற 100 கார்கள் சேற்றில் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வரை சேர்ந்த கோன்னீ மான்சீஸ் என்ற பெண், தனது கணவரை அழைத்து வருவதற்காக டென்வர் சர்வதேச விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார்.

விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. இதனால் பொறுமையை இழந்த அவர், தனது செல்போனை எடுத்து விமான நிலையத்துக்கு செல்ல மாற்றுப்பாதை இருக்கிறதா என கூகுள் வரைபடத்தில் தேடினார்.

அப்போது, 43 நிமிடங்களில் செல்ல வேண்டிய விமான நிலையத்துக்கு குறுக்கு பாதையில் 23 நிமிடங்களில் சென்று விடலாம் என கூகுள் வரைபடம் காட்டியது. அதன்படி கூகுள் வரைபடம் காட்டிய பாதையில் கோன்னீ மான்சீஸ் காரை ஓட்டி சென்றார்.

பொது வழியற்ற மண் சாலையில் சென்ற அவரது கார் சிறிது தூரம் சென்ற பிறகு சேற்றில் சிக்கிக் கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் கோன்னீ மான்சீஸ் மட்டும் இப்படி மாற்றுப்பாதையில் வந்து சிக்கிக்கொள்ளவில்லை.

அவருக்கு முன்னதாக சுமார் 100 கார்கள், கூகுள் வரை படத்தை நம்பி தவறான முடிவெடுத்து சேற்றில் சிக்கிக்கொண்டிருந்தன. சேற்றில் சிக்கிய வாகனங்கள் மீள முடியாமலும், ஒரு கார் மட்டுமே பயணிக்கக் கூடிய அகலப்பாதையில் வாகனத்தைத் திருப்ப முடியாமலும் கார் டிரைவர்கள் பல மணி நேரம் தவித்தனர்.