நியூயார்க்,
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய 4 ஐரோப்பிய நாடுகள் புதிதாக ஆதரவைத் தெரிவித்துள்ளன.
நியூயார்க்கில் நடை பெற்ற ஐக்கிய நாடுகள் கவுன்சில் கூட்டத்தின் போது நடைபெற்ற முதல் விசெக்ராட் குழு மற்றும் இந்தியா இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஆதரவு முறைப்படியாக அளிக்கப்பட்டது.
இந்தியா உலக நாடுகளின் தெற்குப் பிராந்தியத்தின் முக்கிய நாடாகவும், இந்தோபசிபிக் பகுதியில் வளர்ந்து வரும் சக்தி நாடாகவும் திகழ்வதால், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறத் தகுதியுடையது என்று ஸ்லோவாக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுராஜ்ப்ளானார் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பாது காப்பு கவுன்சிலின் கட்டமைப்பு 21-ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் யதார்த்தங்களை பிரதிபலிக்கவில்லை என்றும், காலனி ஆதிக்க காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பில் மக்கள் தொகை மற்றும் பொருளாதார செல்வாக்கிற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.
பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை 15 இல் இருந்து 25 அல்லது 26 ஆக விரிவுபடுத்த வேண்டும் என்று இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
சீனா மட்டுமே இந்தியாவுக்கு ஆதரவளிக்காத நிலையில் பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய முக்கிய நாடுகள் இந்தியாவுக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தச் சூழலி ல் ஐரோப்பிய நாடுகளின் இந்த புதிய ஆதரவு இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.