உலக செய்திகள்

இந்தியா நம்பகமான நட்பு நாடாக உள்ளது: நேபாள பிரதமர் பாலேந்திர ஷா பேச்சு

இந்தியா எப்போதும் நேபாளத்தின் வளர்ச்சிப் பயணத்தில் நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது என்று பாலேந்திர ஷா கூறினார்.

இந்தியா - நேபாளம் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதில் பாலேந்திர ஷாவுக்கு தெளிவான பார்வையும், உறுதியான அர்ப்பணிப்பும் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அர்ப்பணிப்பை உணர முடிந்தது

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு ஐ.நா. சபையில் உலகின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா உரையாற்றியபோது, அவரது தொலைநோக்கு பார்வையை தெளிவாக அறிய முடிந்தது. இன்று அவருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போதும், நேபாளத்தின் எதிர்காலம் மற்றும் இந்தியா - நேபாளம் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் அவருக்கு இருக்கும் தெளிவான பார்வையையும், அர்ப்பணிப்பையும் உணர முடிந்தது.

நம்பகமான கூட்டாளி

இந்த ஆண்டு நேபாள மக்கள் அவருக்கு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க வெற்றி, அந்நாட்டின் இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் பிரதிபலிக்கிறது. இந்தியா எப்போதும் நேபாளத்தின் வளர்ச்சிப் பயணத்தில் நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது. இரு நாடுகளும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல. குடும்ப உறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையால் இணைக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் தங்களின் மகிழ்ச்சியையும், சவால்களையும் பகிர்ந்து கொள்கின்றன. வளர்ச்சிப் பயணத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறோம்.கடந்த ஆகஸ்டு மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். நேபாளத்தின் மறுகட்டமைப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு உதவும் வகையில் 24 ஆயிரம் கோடி நேபாள ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி ஒத்துழைப்பு நிதி அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நேபாள பிரதமர் பேச்சு

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா பேசியதாவது: "இந்தியாவுக்கு வருமாறு அன்புடன் அழைப்பு விடுத்ததற்கும், சிறப்பான விருந்தோம்பல் அளித்ததற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் என்றும் மாறாத நல்லெண்ணம் ஆகியவையே நேபாளம் - இந்தியா இடையிலான உறவின் அடித்தளமாகும். இந்த ஒப்பற்ற உறவின் மையமாக இரு நாட்டு மக்களும் திகழ்கின்றனர்.நேபாளம் - இந்தியா இடையிலான உறவு இமயமலையைப் போல உறுதியானது; கடலைப் போல பரந்தது. இந்த நெருக்கம் எந்த வார்த்தைகளாலும் முழுமையாக விவரிக்க முடியாத அளவுக்கு ஆழமானது. நம்பகமான அண்டை நாடாக இந்தியா உள்ளது. இயற்கை பேரிடர்கள் மற்றும் இக்கட்டான காலங்களில் தொடர்ந்து முதலில் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதற்காக இந்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்."என்றார்.

SCROLL FOR NEXT