போர்ட் லூயிஸ்,
இந்தியா மற்றும் மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, மொரிஷியஸ் நாட்டிற்கு 2 நாட்கள் (ஆகஸ்ட் 20, 21) அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இதையொட்டி, ஆகஸ்ட் 20-ந் தேதி அந்நாட்டு பிரதமர் நவின்சந்திர ராம்கூலமை நேரில் சந்தித்து பேசினார். இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் ஒரு பகுதியாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் மொரிஷியஸின் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் இடையே நீண்ட கால எரிபொருள் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், மொரிஷியஸ் நாட்டின் ஒட்டுமொத்த வாகன பெட்ரோல், அதிவேக டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகிய இறக்குமதித் தேவைகளையும் இந்தியன் ஆயில் நிறுவனமே முழுமையாகப் பூர்த்தி செய்ய உள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக ஒத்துழைப்பு குறித்த இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால கூட்டு எரிசக்தி செயல்பாடுகளை மேலும் முறைப்படுத்தி, பலப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-மொரிஷியஸ் இடையேயான இந்த 5 ஆண்டுகால ஒப்பந்தம், பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் மட்டுமின்றி, அந்நாட்டு அதிகாரிகளுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் உயிரி எரிபொருள் ஒத்துழைப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியது ஆகும். இதன் மூலம் மொரிஷியஸ் நாட்டிற்கு நீண்ட கால எரிபொருள் விநியோக உத்தரவாதம் கிடைப்பதுடன், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளிலிருந்து முழுப் பாதுகாப்பும் கிடைக்கிறது.
அண்மை ஆண்டுகளில், தெற்காசிய பிராந்தியத்திற்கு வெளியே ஒரு இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் மேற்கொண்டுள்ள முதலாவது நீண்டகால விநியோக ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின் போது, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி மொரிஷியஸ் நாட்டின் முக்கிய மந்திரிகளான பேட்ரிக் ஜெர்வைஸ் அசிர்வாதன் (எரிசக்தித் துறை), ஜான் மைக்கேல் சூன் சாவ் யங் சிக் யுவென் (வர்த்தகத் துறை) மற்றும் தனஞ்சய் ராம்புல் (வெளியுறவுத் துறை) ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், போர்ட் லூயிஸின் மெர் ரூஜ் பகுதியில், இந்தியன் ஆயில் மொரிஷியஸ் நிறுவனம் சார்பில் கட்டப்பட உள்ள 27.5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட கப்பல் எரிபொருள் சேமிப்பு நிலைய கட்டுமான பணிக்கும் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி அடிக்கல் நாட்டினார்.