பரூக் அப்துல்லா 
உலக செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

பயங்கரவாதத்தின் நோக்கம் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் பரூக் அப்துல்லா கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ள சூழலிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். "பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டை நிறுத்தும் வரை காத்திருந்தால் காலம் கடந்துவிடும். பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்" என்று பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

சார்க் அமைப்பை மீண்டும் செயல்படுத்த வேண்டும்

செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா கூறியதாவது: துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ மோதல்களால் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. பாகிஸ்தானிடம் பயங்கரவாதத்தை நிறுத்துமாறு நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். பயங்கரவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது. பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். அதன் மூலம்தான் முன்னேற்றத்துக்கான வழியைக் கண்டறிய முடியும்"

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பான சார்க் மீண்டும் செயல்படத் தொடங்க வேண்டும். இந்தியா இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய நாடு . அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதற்கான வழியை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காட்டியுள்ளார். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பிரச்சினைகளைத் தீர்த்து, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும்”என்று தெரிவித்தார்.

தொடர் பயங்கரவாத தாக்குதல்கள்

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற 2 பயங்கரவாத தாக்குதல்களில் 2 சிறப்பு போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், 3 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் காயமடைந்தனர்.இதுகுறித்து பேசிய பரூக் அப்துல்லா, பயங்கரவாதத்தின் மூலம் காஷ்மீரை கைப்பற்றிவிடலாம் என்று நினைப்பவர்கள் அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்றார்.

பயங்கரவாதத்தின் நோக்கம் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் கூறினார்.அதே நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக டெல்லியில் கூறப்படுவது தவறான கருத்து என்றும் அவர் தெரிவித்தார். "இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அடுத்த தாக்குதல் எங்கு நடைபெறும் என்பதைக்கூட கணிக்க முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்றும் பரூக் அப்துல்லா வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT