நியூயார்க்,
கடந்த 19 ஆண்டுகளில் இந்தியா, மலேரியா நோயை பெருமளவு குறைத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு சார்பில் உலக மலேரியா அறிக்கை-2020 வெளியிடப்பட்டுள்ளது. அதில், உலக அளவில் கடந்த ஆண்டு மலேரியா நோயாளிகள் எண்ணிக்கை 22 கோடியே 90 லட்சமாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை மாற்றமின்றி இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு, உலக அளவில் மலேரியாவுக்கு 4 லட்சத்து 11 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 4 லட்சத்து 9 ஆயிரம் பேரும் பலியாகி உள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள், மலேரியா ஒழிப்பில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளன. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், இந்தியாதான் மலேரியா நோயை பெருமளவு குறைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 2000-ம் ஆண்டு 2 கோடி மலேரியா நோயாளிகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு 56 லட்சம் மலேரியா நோயாளிகள்தான் பதிவு செய்யப்பட்டது. அந்த அளவுக்கு 19 ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல், இந்தியாவில் பலி எண்ணிக்கையும் 29 ஆயிரத்து 500-ல் இருந்து 7 ஆயிரத்து 700 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இப்போதும் தென்கிழக்கு ஆசியாவின் மொத்த மலேரியா நோயாளிகளில் 88 சதவீதம்பேர் இந்தியாவில்தான் உள்ளனர்.
19 ஆண்டுகளுக்கு முன்பு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மலேரியா நோயாளிகள் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சமாக இருந்தது. இது, கடந்த ஆண்டு 63 லட்சமாக குறைந்துள்ளது. உலக அளவிலான மொத்த மலேரியா பாதிப்பில், 70 சதவீத பாதிப்பு, 11 ஆப்பிரிக்க நாடுகளில்தான் ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் அங்கு 71 சதவீதமாக இருக்கிறது.
நிதி தட்டுப்பாடு காரணமாக, மலேரியா ஒழிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலும் மலேரியா ஒழிப்பில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் ஆகும். மலேரியாவுக்கு எதிரான போரை எல்லா நாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.