கோப்புப்படம் 
உலக செய்திகள்

மோதலுக்கான களமாக விண்வெளி இருக்கக்கூடாது - ஐ.நா.வில் இந்தியா திட்டவட்டம்

விண்வெளி ஒத்துழைப்புக்கான ஒரு வெளியாகவே நீடிக்க வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா தெரிவித்துள்ளது.

நியூயார்க்,

விண்வெளி, மோதலுக்கான களமாக இருக்கக்கூடாது; மாறாக ஒத்துழைப்புக்கான இடமாக மட்டுமே இருக்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.

சுதா மூர்த்தி எம்.பி.

இந்திய எம்.பி.க்கள் குழு ஒன்று ஐ.நா.வுக்கு பயணம் சென்றுள்ளது. ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை சந்திப்பதற்காக இந்த குழுவினர் சென்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஐ.நா. பொதுசபையில் நடந்த விண்வெளி பற்றிய விவாதத்தில் இந்த எம்.பி.க்கள் குழுவினர் பங்கேற்றனர். அதில் இந்தியா சார்பில் சுதா மூர்த்தி எம்.பி. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வளர்ச்சி, பாதுகாப்பு

இந்தியா, விண்வெளி ஆய்வுகளில் முக்கியமாக பங்குபெறும் ஒரு நாடாகும். எங்கள் விண்வெளி திட்டங்கள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பரிமாணங்களை சார்ந்தது. விண்வெளி நம் அனைவருக்குமானது என இந்தியா நம்புகிறது. நாம் அனைவரும் ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலத்தை கொண்டவர்கள். இந்த விண்வெளி, ஒத்துழைப்புக்கான ஒரு வெளியாகவே நீடிக்க வேண்டும். மாறாக மோதலுக்கான இடமாக இருக்கக்கூடாது என்பதே எங்கள் கருத்து.

விண்வெளியில் ஆயுதப்போட்டி

விண்வெளியில் ஆயுதப்போட்டியை தடுப்பதற்கான அணுகுமுறைகள் குறித்தும், எந்த அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கருத்து வேறுபாடு தொடர்கிறது. விண்வெளியில் ஆயுதப்போட்டியை தடுப்பது தொடர்பான சட்டப்பூர்வமாகப் பிணைக்கும் ஒரு கருவியானது, உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், சரிபார்க்கக்கூடியதாகவும், பல தரப்பு பேச்சுவார்த்தை மூலம் அடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை, ஆயுதக் குறைப்பு மாநாட்டில் இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.

இந்தியா நம்புகிறது

சில அச்சுறுத்தல்கள் அல்லது மற்றவற்றின் மீது மட்டும் கவனம் செலுத்துவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். விண்வெளிப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு மன்றங்களின் ஆணைகள் மதிக்கப்பட வேண்டும். இந்த செயல்முறையின் எந்தவொரு விளைவும், அமைதியான மற்றும் சட்டப்பூர்வமான நோக்கங்களுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளைப் பரிமாறிக்கொள்வதைத் தடுக்கக் கூடாது என்று ஒரு வளரும் நாடாக இந்தியா நம்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT