அபுதாபி,
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இன்று காலை புறப்பட்டார். அவர் 6 நாட்கள் பயணமாக 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், நார்வே, சுவீடன், நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
இந்தநிலையில், தனது பயணத்தின் முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு சார்பில் உற்சாக ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதலை தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், வளைகுடா நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட சூழலில், தற்போது மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அபுதாபியில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து, இருதரப்பு உறவுகள் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம், “ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது, ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் சூழ்நிலையை ஐக்கிய அரபு அமீரகம் நிதானத்துடன் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது” என்று பிரதமர் மோடி கூறினார்.
மேலும், அமீரக அதிபரிடம் மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழல் உலக அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, “மேற்கு ஆசியாவில் அமைதியைக் கொண்டுவர இந்தியா தன்னால் இயன்ற அனைத்து ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளது" என்றும் உறுதியளித்தார்.
முன்னதாக, அமெரிக்கா-ஈரான் இடையே நடந்த போரின்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.