மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில், சவுதி அரேபியாவில் விமான நிலையங்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, அங்கு வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேவையான நேரங்களில் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது: தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். அங்கு நடைபெற்று வரும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் செய்திகளை சமூக வலைதளங்களில் பகிரவோ, மறுபதிவு செய்யவோ வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் அபா சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு போரில் ஏமன் அரசு படைக்கு சவுதி ஆதரவு அளிப்பதால் ஹவுதி கிளர்ச்சிக்குழு அந்த நாட்டையும் குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்துகிறது. சவுதி அரேபியா விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா கண்டித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகளைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம், ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் விசா சேவை வழங்கும் வி.எப்.எஸ். நிறுவனத்தின் சேவைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமைக்கு ஏற்ப கூடுதல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்கள் அவசர உதவி தேவைப்பட்டால், பிரவாசி பாரதிய சகாயதா கேந்திராவின் 24 மணி நேர கட்டணமில்லா உதவி எண்ணான 8002471234-ஐ தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது