உலக செய்திகள்

பாஸ்டன் நகரிலிருந்து புறப்பட்டது ‘ஐ.என்.எஸ். சுதர்ஷினி’ கப்பல்

இந்திய மூவர்ண கொடியுடன் இக்கப்பல் கம்பீரமாக வலம் வந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கம்பீரமாக நங்கூரமிட்டிருந்த இந்திய கடற்படையின் பாய்மர பயிற்சி கப்பலான ‘ஐ.என்.எஸ். சுதர்ஷினி’, தனது அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று அங்கிருந்து புறப்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பாய்மரக்கப்பல் அணிவகுப்பு

இந்திய கடற்படையின் ‘லோகயான் 26’ என்ற உலகளாவிய கடல் கடந்த பயண திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐ.என்.எஸ். சுதர்ஷினி கப்பல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டது. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி நடைபெற்ற மதிப்புமிக்க ‘செயில் 250’ பாய்மரக் கப்பல் அணிவகுப்பு மற்றும் சர்வதேச கடற்படை அணிவகுப்பில் இக்கப்பல் இந்தியா சார்பில் பங்கேற்றது.

உலக நாடுகளின் கவனம்

அமெரிக்காவின் நார்போக், பால்டிமோர், நியூயார்க் மற்றும் பாஸ்டன் ஆகிய கடலோர நகரங்களில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாக்களில், இந்திய மூவர்ணக் கொடியுடன் இக்கப்பல் கம்பீரமாக வலம் வந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

பிரமுகர்கள் வரவேற்பு

அமெரிக்காவில் கப்பல் நிறுத்தப்பட்டிருந்த நாட்களில், அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர், சர்வதேச கடற்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என ஆயிரக்கணக்கானோர் கப்பலுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அவர்களுக்கு இந்திய கடற்படையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் மூலம் இந்தியாவின் பழைமையான கடல்சார் பாரம்பரியம் உலக அரங்கில் பறைசாற்றப்பட்டுள்ளது.

அடுத்த இலக்கு போர்ச்சுகல்

அமெரிக்காவில் தனது நல்லெண்ணப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ஐ.என்.எஸ். சுதர்ஷினி, தற்போது அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக போர்ச்சுகல் நாட்டின் அசோரஸ் தீவுகளில் உள்ள 'பொன்டா டெல்கடா' துறைமுகத்தை நோக்கி தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்கியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் கடல்சார் வலிமைக்கும், நட்புக்கும் இலக்கணமாக இக்கப்பல் தொடர்ந்து பயணித்து வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..