ஐ.என்.எஸ். சுதர்ஷினி 
உலக செய்திகள்

போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரிலிருந்து புறப்பட்டது ‘ஐ.என்.எஸ். சுதர்ஷினி’ கப்பல்

தொழில்முறை சந்திப்புகளின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையை சேர்ந்த இளம் பயிற்சியாளர்கள் போர்ச்சுகல் கடற்படை அகாடமிக்கு நேரில் சென்றனர்.

லிஸ்பன்,

மூன்று நாள் துறைமுக பயணத்திற்கு பிறகு இந்திய கடற்படை கப்பல் சுதர்ஷினி லிஸ்பனிலிருந்து புறப்பட்டது.

இந்திய கடற்படையின் பாய்மர பயிற்சி கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, தனது 'லோகாயன் 26' கடல்கடந்த பயணத்தின் ஒரு பகுதியாக, போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் துறைமுகத்தில் தனது மூன்று நாள் பயணத்தை நேற்று வெற்றிகரமாக நிறைவு செய்தது.

உயரதிகாரிகளுடன் சந்திப்பு

இந்த துறைமுக பயணத்தின் போது, ஐஎன்எஸ் சுதர்ஷினியின் கட்டளை அதிகாரி, போர்த்துகீசிய கடற்படை அகாடமியின் தளபதி ரியர் அட்மிரல் மிகுவல் பெஸ்ஸா பச்சேகோ மற்றும் போர்ச்சுகல் கடற்படையின் துணைத் தளபதி ரியர் அட்மிரல் ஜோவோ பாலோ சில்வா பெரேரா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்புகள் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான உறவையும், பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.

சுதர்ஷினியின் கட்டளை அதிகாரி, போர்த்துகீசிய கடற்படை அகாடமியின் தளபதி ரியர் அட்மிரல் மிகுவல் பெஸ்ஸா பச்சேகோ

பயிற்சி மைய பார்வை

தொழில்முறை சந்திப்புகளின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையை சேர்ந்த இளம் பயிற்சியாளர்கள் போர்ச்சுகல் கடற்படை அகாடமிக்கு நேரில் சென்றனர். அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க வளாகம் மற்றும் அதிநவீன பயிற்சி வசதிகளை அவர்கள் சுற்றி பார்த்தனர். மேலும், கப்பல் ஓட்டும் திறன் மற்றும் உயரமான பாய்மர கப்பல்களை கையாள்வது குறித்த தங்களின் அனுபவங்களையும், கருத்துக்களையும் இரு நாட்டு பயிற்சியாளர்களும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர்.

சிறப்பு வரவேற்பு

இந்த துறைமுக பயணத்தை கொண்டாடும் விதமாக, ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பலில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் போர்ச்சுகல் நாட்டின் ராணுவ அதிகாரிகள், தூதரக உயர் அதிகாரிகள் மற்றும் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரு நாடுகளின் நட்புறவை பறைசாற்றும் வகையில் இந்த ஒட்டுமொத்த பயணமும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.