வாஷிங்டன்,
நாசா விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன், அங்கே உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தில் 8 மாதங்கள் தங்கியிருந்து ஆய்வில் ஈடுபட உள்ளார்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்வதற்காக வருகிற 14-ந் தேதி 3 விண்வெளி வீரர்களை அனுப்புகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனில் மேனன் (வயது 49) என்ற விண்வெளி வீரரும் செல்கிறார். கஜகஸ்தானின் பைகானூர் விண்வெளி நிலையத்தில் இருந்து சோயுஸ் விண்கலம் மூலம் இவர்கள் விண்வெளிக்கு பயணமாகின்றனர். அனில் மேனன், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் 8 மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வார் என நாசா அறிவித்து உள்ளது.
அமெரிக்காவின் மின்னபோலிசில் பிறந்த அனில் மேனன், அவசர சிகிச்சை நிபுணராக அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர் ஆவார். ஆப்கானிஸ்தான் போர் மற்றும் எவரெஸ்ட் சிகர பேரிடர் உள்ளிட்ட சம்பவங்களில் இவர் பணியாற்றி உள்ளார். போலியோ தடுப்பூசி திட்ட ஆய்வு படிப்புக்காக இந்தியாவில் ஓராண்டை கழித்துள்ளார். இவரது மனைவி அன்னாவும் விண்வெளி வீராங்கனை என்பதும், இவர் கடந்த 2024-ம் ஆண்டு விண்வெளி சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.