வாஷிங்டன்,
அமெரிக்காவில் பெற்றோர், பாட்டியை சுட்டுக்கொன்ற இந்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்தவர் ஸ்விரா ராம் (வயது 56). இவருக்கு திருமணமாகி ராணி (வயது 46) என்ற மனைவியும் 2 மகன்களும் இருந்தனர். ஸ்விரா ராமின் தாயார் மிந்திர் கவுர் (வயது 73). ஸ்விரா ராம் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹிடல்கொ பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஸ்விரா ராமின் மூத்த மகன் சோப்ரா (வயது 19) நேற்று தனது குடும்ப உறுப்பினர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். பெற்றோர், பாட்டி, சகோதரன் என 4 பேர் மீதும் சோப்ரா சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் பெற்றோர் ஸ்விரா ராம், ராணி, பாட்டி மிந்திர் கவுர் என 3 பேர் உயிரிழந்தனர். சோப்ராவின் சகோதரன் படுகாயமடைந்தார்.
துப்பாக்கி சூடு நடத்திவிட்டு சோப்ரா காரில் தப்பிச்செல்ல முயன்றார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து அறிந்த போலீசார் , காரில் தப்பிச்செல்ல முயன்ற சோப்ராவை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.