உலக செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற ஐ.என்.எஸ். சுதர்ஷினி

அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

வாஷிங்டன்,

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சுதர்ஷினி கப்பல், அமெரிக்காவின் பால்டிமோர் கடற்கரையை சென்றடைந்துள்ளது. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஐ.என்.எஸ். சுதர்ஷினி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐ.என்.எஸ். சுதர்ஷினி கப்பல் ஜூன் 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை இங்கிலாந்தின் நார்போக்கில் நடைபெற்ற 'செயில் 250 வர்ஜீனியா' கொண்டாட்டங்களில் பங்கேற்றது. அப்போது, ​​உலகெங்கிலும் இருந்து வந்த பாய்மரக் கப்பல்களுடன் இணைந்து, 'பரேட் ஆப் செயில்' மற்றும் 'சிட்டி க்ரூ பரேட்' ஆகியவற்றில் இந்தியா சார்பில் ஐ.என்.எஸ். சுதர்ஷினி கலந்து கொண்டது.

அமெரிக்க அரசு தங்கள் நாட்டின் 250-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, 'சுதந்திரம் 250' (Freedom 250) என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது அமெரிக்கா சென்றடைந்துள்ள ஐ.என்.எஸ். சுதர்ஷினி கப்பல், அங்கு ஜூலை 4-ந்தேதி நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “வரலாற்றுச் சிறப்புமிக்க 'லோக்காயன் 26' கடல்கடந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பாய்மரப் பயிற்சிக் கப்பல் ஐ.என்.எஸ். சுதர்ஷினி பால்டிமோர் சென்றடைந்தது. இந்த பயணம், இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தையும், இந்திய கடற்படைக்கும், அமெரிக்கக் கடற்படைக்கும் இடையிலான நீடித்த நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.