கீவ்
ரஷியாவின் தீவிர தாக்குதலில் உக்ரைனில் ஏவுகணை தொழிற்சாலை தரைமட்டம் ஆகியுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது நான்கரை ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் ஆயுதம், நிதி, உளவு தகவல்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.
இதனால், ரஷியாவுக்கு எதிராக உக்ரைனும் சளைக்காமல் போரிட்டு வருகிறது. குளிர்காலம் நெருங்கி வரும் சூழலில், ரஷியா பெரிய அளவிலான ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மற்றும் அதற்குட்பட்ட 12 பிராந்தியங்கள் மீது ரஷிய ராணுவம் ஒரே இரவில் கொடூர ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இதனை அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆயுதங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வடக்கு பாலம் மற்றும் உக்ரைனின் அதிநவீன பிளமிங்கோ குரூஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் 'மெரிடியன்' தொழிற்சாலை ஆகியவற்றையும் ரஷிய படைகள் தரைமட்டமாக்கியுள்ளன.
இதுதவிர, உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் ஒன்றையும் ரஷியா ஏவுகணைகளை வீசி தாக்கி அழித்துள்ளது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.