பொகோட்டா,
கொலம்பியாவில் அக்கம்பக்கத்தில் நடக்கும் வதந்திகளையும், பிறருடைய ரகசியங்களையும் சேகரித்து விற்பனை செய்ததன் மூலம், கொலம்பியாவைச் சேர்ந்த 67 வயது மூதாட்டி ஒருவர் 2 சொந்த வீடுகளை வாங்கியுள்ள விசித்திரமான சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா நாட்டின் குவாண்டியோ மாகாணத்தில் உள்ள ஆர்மீனியா நகரைச் சேர்ந்த மூதாட்டி மிரியம் (67 வயது). மிரியம் தினமும் காலையில் தனது வீட்டின் வாசலில் அமர்ந்து, அக்கம்பக்கத்தில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். குடும்ப சண்டைகள், கள்ளக்காதல் விவகாரங்கள், தனிநபர் மோதல்கள் என பகுதியில் நடக்கும் அனைத்து சுவாரசியமான விஷயங்களையும் ஆதாரங்களுடன் சேகரிக்கிறார். இதனால் மூதாட்டி, அப்பகுதியில் "வதந்திகளின் ராணி" அல்லது ஸ்பானிஷ் மொழியில் 'சிஸ்மோசா' என்று அழைக்கப்பட்டார்.
மிரியம் சாதாரணமாக கிடைக்கும் தகவல்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் தேதிகள் மற்றும் நேர குறிப்புகளுடன் துல்லியமாக எழுதி வைக்கிறார். மேலும் சில சம்பவங்களைப் புகைப்பட ஆதாரங்களாகவும் சேகரித்து வைத்துள்ளார். அன்றாட சாதாரண செய்திகள் அல்லது வதந்திகளைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களிடம் 5,000 முதல் 10,000 கொலம்பிய பெசோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.150 - ரூ.300) வரை கட்டணம் வசூலிக்கிறார்.
தகவல்களை விற்பது ஒருபுறமிருக்க, சிலரின் அந்தரங்க ரகசியங்களை வெளியில் சொல்லாமல் மூடி மறைப்பதற்கும் இவர் பெருந்தொகை வசூலிக்கிறார். ஒருமுறை தனது மனைவி ஊரில் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவன் ஒருவனின் ரகசியத்தை வெளியில் சொல்லாமல் இருக்க, அவரிடமிருந்து மட்டும் 700,000 பெசோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,000) வரை மிரியம் பெற்றுள்ளார்.
இந்த விசித்திரமான தொழில் மூலம் தனக்கு கிடைத்த தினசரி வருமானம் மற்றும் ரகசியம் காப்பதற்காக பெற்ற பெருந்தொகை ஆகியவற்றைக் கொண்டு, எந்தவித வங்கிக் கடனும் இன்றி 2 சொந்த வீடுகளை வாங்கியுள்ளதாக மிரியம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தனது 2-வது வீட்டில் தோழிகளுடன் அமர்ந்து தாயக் கட்டம் விளையாடும்போதும், அடுத்தடுத்த புதிய வதந்திகளைச் சேகரிப்பதாக கூறியுள்ளார்.
மிரியத்தின் இந்த செயல் தனிமனித உரிமைகளைப் பறிப்பதாகவும், பிறரின் அந்தரங்க வாழ்க்கையில் தலையிடுவதாகவும் கூறி அக்கம்பக்கத்தினர் பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சிலர் இவரைப் போலவே வதந்திகளை விற்க முயன்று தோற்றுப் போனதாகவும் கூறப்படுகிறது.
"வதந்தி என்பது எனது வாழ்க்கை, அது எனது ரத்தத்திலேயே ஊறியுள்ளது. நான் எந்த ஒரு தகவலையும் தகுந்த ஆதாரங்கள் இன்றி வெளியில் சொல்வதில்லை. உலகில் மனிதர்கள் இருக்கும் வரை வதந்திகளும் இருக்கும், அதனால் இந்த தொழிலுக்கு எப்போதும் அழிவில்லை" என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
மிரியம் தன் பங்கிற்கு, ஒரு காலத்தில் தனது வதந்திகளை எதிர்த்தவர்கள், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறியும் ஆர்வம் இருப்பதால் இப்போது மீண்டும் வருவதாகக் கூறுகிறார். மற்றவர்கள் தனது வணிக மாதிரியை நகலெடுக்க முயன்றதாகவும், ஆனால் தனது பல வருட அனுபவம் மற்றும் தகவல் திரட்டும் திறன் காரணமாக தனக்கு ஒரு சாதகம் இருப்பதாக அவர் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறுகிறார்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வேளையில், இது ஒரு "புத்திசாலித்தனமான தொழில்முனைவோர் சிந்தனை" என்றும், அதே வேளையில் "தனிநபர் சுதந்திரத்தை சீர்குலைக்கும் ஒழுக்கக்கேடான செயல்" என்றும் இருவேறு கருத்துக்களுடன் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.