பயங்கரவாதத்தால் பாதிக்கபட்டவர்களை நினவுகூரும் சர்வதேச தினம் 
உலக செய்திகள்

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச நினைவு நாள் இன்று

பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது மற்றும் மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்களை பாதுகாப்பது குறித்து இந்த நாள் வலியுறுத்துகிறது.

நியூயார்க்,

பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சர்வதேச நினைவு தினம், ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டம் 2017-ஆம் ஆண்டு, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில்தான் நடைபெற்றது. அப்போது, பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையில் ஆகஸ்ட் 21ஆம் தேதியை, “பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினமாக” ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது.

நோக்கம்

ஐ.நா. பொதுச் சபையால், தீர்மானம் (72/165) மூலம் இந்த தினம் நிறுவப்பட்டது. பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது மற்றும் மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்களை பாதுகாப்பது குறித்து இந்த நாள் வலியுறுத்துகிறது.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும், அவர்களுக்கு தேவையான உளவியல் மற்றும் சமூக ஆதரவு வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்கிற அவசியத்தை இத்தினம் நினைவுகூர்கிறது. மேலும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை உலக அளவில் முன்னெடுத்து, அவர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.