துபாய்,
குவைத்தில் உள்ள அமெரிக்காவின் விமானத் தளத்தை ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கியதாகக் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.
மேலும் ஹர்முஸ் ஜலசந்தியில் செல்லும் கச்சா எண்ணெய், சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பின்னர், இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று சுமூக தீர்வு எட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜூலை மாத இறுதி முதல் செப்டம்பர் தொடக்கம் வரை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, கடந்த சில வாரங்கள் தாக்குதல் நிறுத்தப்பட்டு அமைதி நிலவி வந்தது. மேலும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக இரு தரப்பும் கூறி வந்தன.
ஆனாலும், ஈரான் மீது அமெரிக்கா கடந்த 3ம் தேதி மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் குவாசம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே குவாசம் தீவில் உள்ள ஏவுகணை ஏவு தளங்கள் மற்றும் ஈரானின் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் கடந்த 13, 16, 17 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. பஹ்ரைனின் ரிபா நகரில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் உள்ள ரேடார், பஹ்ரைனின் ஷேக் இசா விமானப்படைத்தளத்தில் உள்ள ரேடாரை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களை பஹ்ரைன் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
இந்நிலையில், பஹ்ரைனில் உள்ள படைத்தளங்களை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் குவாசம் தீவில் உள்ள ஏவுகணை ஏவு தளங்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) அதிகாலையில், குவைத்தில் உள்ள அமெரிக்காவின் அலி அல் சலேம் விமானத் தளத்தை ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) மூலம் தாக்கியதாகக் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், எண்ணெய் வளம் நிறைந்த அந்த வளைகுடா நாட்டில் பல வாரங்களுக்குப் பிறகு முதன்முறையாக வான் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, வான் பாதுகாப்பு அமைப்புகள், அத்துடன் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களையும் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளை கண்காணிக்கும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, இது குறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, குவைத் ராணுவம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆளில்லா விமானத் தாக்குதல்களை இடைமறித்து வருவதாக தெரிவித்தது. ஆனால் உடனடியாக எந்த சேதம் தொடர்பான தகவல்களை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் குவைத் நாட்டின் வெளியுறவு அமைச்சகம், ஈரானின் தொடர்ச்சியான "குற்றவியல்" தாக்குதல்களைக் கண்டித்ததுடன், அவை குவைத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறியது.