உலக செய்திகள்

ஈரான் மோதல்: இந்திய கப்பல் ஊழியர்கள் 3 பேர் பலி; ஒருவர் காயம்

அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பின்னர் இன்றும் ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகளின் வான்வழி தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

புதுடெல்லி

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.

இதனையடுத்து, ஹார்முஜ் ஜலசந்தி பகுதியை நெருங்க கூடிய கப்பல்களை ஈரான் அச்சுறுத்தி வருகிறது. மத்திய கிழக்கில் பதற்றம் நிறைந்த சூழலில், பெர்சியன் வளைகுடாவின் குறுகலான நுழைவு பகுதியில் ஈரான் பல்வேறு தாக்குதல்களை நடத்தியிருக்க கூடும் என நம்பப்படுகிறது. இதனால் கடல் சார்ந்த வர்த்தக வழிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இது கப்பல் மற்றும் படகுகளில் பயணிப்பவர்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுத்த கூடிய வகையில் உள்ளது. இதனால், அதற்கேற்ப செயல்படும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி கப்பல் போக்குவரத்துக்கான பொது இயக்குநரகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், கடல்வழி பயணத்தில் இந்திய ஊழியர்கள் 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ள சம்பவங்கள் தெரிய வந்துள்ளன.

அவர்களில் 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் பயணித்த இவர்கள் அனைவரும் வெளிநாட்டு கொடியை கொண்ட கப்பல்களில் பணியாற்றி வந்தவர்கள் என தெரிவித்து உள்ளது. அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பின்னர் இன்றும் ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகளின் வான்வழி தாக்குதல் தொடர்ந்து வருகிறது.