துபாய்,
அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தாகி உள்ளது. ஹார்முஸ் நீரிணை திறப்பு, ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கம் உள்ளிட்ட 14 நிபந்தனைகள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து ஹார்முஸ் நீரிணையை திறந்து மேற்பார்வையிடுவதற்காக தனி ஆணையத்தை உருவாக்கி ஈரான் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பாரசீக வளைகுடா நீரிணை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கப்பல்கள் தங்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் ஹார்முஸ் நீரிணையை கடக்க ஈரான் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இதை பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்வதாக ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாகாயி தெரிவித்துள்ளார்.