டெஹ்ரான்,
வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்த அமெரிக்காவும், இஸ்ரேலும், தொடர்ந்து அந்த நாட்டை தாக்கி வருக்கின்றன. இதனால் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டு உள்ளன.
இந்தபோரில் தங்கள் உச்சபட்ச தலைவரை முதல் நாளிலும், அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல தலைவர்களையும் பறிகொடுத்த ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.
குறிப்பாக இஸ்ரேலின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அயர்ன் டோமை தாண்டி ஈரானின் ஏவுகணைகள் மற்றும் கொத்துக்குண்டுகள் அந்த நாட்டை பதம்பார்த்து வருகின்றன. இதில் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் பெருத்த சேதத்தை சந்தித்து வருகின்றன. மறுபுறம் அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளையும் விடாமல் ஈரான் தாக்கி வருகிறது. இதில் அந்த நாடுகளின் எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.
3 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரில் ஈரான் முற்றிலும் சீரழிந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். குறிப்பாக ஈரானின் கடற்படைகள், விமானப்படைகள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இப்படி வெற்றிக்களிப்பில் அமெரிக்கா இருந்து கொண்டிருக்கும்போது தான் ஈரான் தனது அடுத்த ஆயுதத்தை இறக்கி விட்டது.
அதாவது 4,000 கி.மீ. வரை சென்று தாக்கும் ஏவுகணையை யாரும் எதிர்பாராத வகையில் களத்தில் இறக்கி அமெரிக்காவை மட்டுமின்றி ஒட்டு மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. இதன்படி இந்தியப்பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவான டியாகோ கார்சியாவில் இருக்கும் அமெரிக்கா-இங்கிலாந்து நாடுகளுக்கு சொந்தமான படைத்தளத்தை நோக்கி 2 ஏவுகணைகளை நேற்று வீசியது.
குண்டுவீச்சு விமானங்கள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் தள வாடங்களை நிலைநிறுத்தி உள்ள முக்கியமான அந்த படைத்தளம் ஈரான் கடற்பகுதியில் இருந்து சுமார் 4,000 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த தளத்தை நோக்கி வீசப்பட்ட அந்த ஏவுகணைகளில் ஒன்று நடுவானிலேயே வெடித்தது. மற்றொரு ஏவுகணையை தீவுக்கு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று எஸ்.எம்.3 என்ற இடைமறிப்பு ஏவுகணை மூலம் தாக்கி அழித்தது.
ஈரான் வீசிய இந்த நீண்ட தூர ஏவுகணை 'கொரம்சாகர்-4' வகையை சார்ந்தது ஆகும். கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ரகத்தை சேர்ந்த இந்த ஏவுகணைகளை ஈரான் இதுவரை வெளிப்படையாக சோதித்தது இல்லை. தங்களிடம் இருக்கும் நீண்ட தூர ஏவுகணைகளின் உச்சபட்ச திறனே 2 ஆயிரம் கி.மீ.தான் என்றே ஈரான் கூறி வந்தது. தற்போது டியாகோ கார் சியா தீவை நோக்கி ஏவுகணை செலுத்தப்பட்டிருப்பதன் மூலம் ஈரானின் ஆயுத பலம் அளவிட முடியாத நிலையில் இருப்பதை உறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனிடையே நேற்று வீசப்பட்ட 2 ஏவுகணைகளிலும் சேதம் ஏற்படவில்லை என்றாலும், இந்த தாக்குதல் முயற்சியே அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்நிலையில் டியாகோ கார்சியா மீதான ஏவுகணைத் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்படி டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க - இங்கிலாந்தின் ராணுவ தளத்தைக் குறிவைத்ததாகக் கூறப்படுவதை ஈரான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) (உள்ளூர் நேரம்) மறுத்துள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலின் பின்னணியில் ஈரான் இல்லை என்று ஒரு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்த்தாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தரைவழிப் படையெடுப்புக்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.