புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக தெற்கு ஈரானின் ஹார்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பலியாகி உள்ளனர். இதனை அரசு ஊடகங்கள் வெளியிட்டு உள்ள செய்தி உறுதிப்படுத்தி உள்ளது.
இதுதவிர பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இந்த தொடக்க கட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல் தெரிவித்து உள்ளது.
இந்த மோதலை அடுத்து மத்திய கிழக்கில் மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி சி.பி.எஸ்.இ. தேர்வுகளுக்கான கட்டுப்பாட்டாளர் சான்யாம் பரத்வாஜ் கூறும்போது, மத்திய கிழக்கின் பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது காணப்படும் சூழலால், மார்ச் 5 மற்றும் மார்ச் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த 10, 12 ஆகிய வகுப்புளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன என கூறினார்.
புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறிய அவர், மார்ச் 5-ந்தேதி நிலைமையை பற்றி மறுஆய்வு செய்வோம் என்று கூறினார். ஈரான் மோதல் தொடர்ச்சியாக, நேற்று நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த தேர்வு ஒத்திவைப்பு தொடர்பான அறிவிப்பு, கடந்த ஞாயிறன்று வெளியானது.