ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்காலிக ஒப்பந்தமாக மாறியது. இருப்பினும், ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இதன் விளைவாக, உலக அளவில் முக்கிய எண்ணெய் வர்த்தக வழிப் போக்குவரத்துப் பகுதியான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் அதிரடியாக மூடியது. இந்த உலகளாவிய நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், அமெரிக்கா - ஈரான் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் லூசெர்னே நகரில் உள்ள பர்கன்ஸ்டாக் சொகுசு விடுதியில் நேற்று தொடங்கியது.
அமெரிக்கா தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், டிரம்ப்பின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் வித்கோப் ஆகியோர் பங்கேற்றனர். ஈரானிய தூதுக்குழுவில் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப் பொறுப்பாளராக பங்கேற்றார். ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி, ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர்களாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வெளியுறவு மந்திரி இஷாக் தார், கத்தார் நாட்டின் சார்பில் அதன் பிரதமரும் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி பங்கேற்றார். சுவிட்சர்லாந்து வெளியுறவு மந்திரி இஞ்ஞாசியோ காசிஸ், லெபனான் நாட்டின் ராணுவ தளபதி ஜீன் கவாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்திய நேரப்படி நேற்று பிற்பகலில் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. இந்தச் சந்திப்பானது அடுத்த 60 நாட்களுக்கு நடைபெறவுள்ள ஒரு நீண்ட பேச்சுவார்த்தைத் தொடரின் தொடக்கமாகும். நேற்று நடைபெற்ற முதற்கட்டக் கூட்டத்தில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையே லெபனானில் நடைபெறும் மோதல்களை உடனடியாக நிறுத்துவது, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து கப்பல் போக்குவரத்தைச் சீர்செய்வது மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பல்லாயிரக் கோடி மதிப்பிலான சொத்துக்களை விடுவிப்பது குறித்தும் இருதரப்பும் காரசாரமாக விவாதித்தன. அப்போது அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்க இஸ்ரேல் சதித்திட்டம் தீட்டுவதாக ஈரான் குற்றம்சாட்டியது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது லெபனானில் உள்ள தனது ஆதரவு அமைப்புகளை ஈரான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த கருத்தால் ஆத்திரமடைந்த ஈரான் பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை அரங்கிலிருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்தனர். அமெரிக்கா தனது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஈரானின் ஆயுதப் படைகள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் காலிபாப் எச்சரித்தார்.