உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது; அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டம் அறிவித்தார். மேலும், ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல் பகுதிகளை முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, அமெரிக்க கடற்படை ஈரான் கடல் பகுதிகளை முற்றுகையிட்டுள்ளது. ‘ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கி கப்பல், 11 அழிவு கப்பல்கள் மற்றும் 4 தாக்குதல் கப்பல்கள் மத்திய கிழக்கு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஈரான்-அமெரிக்கா இடையே 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்காலிக போர்நிறுத்தம் 21-ந் தேதி முடிவடைவதால், அதற்கு முன் நிரந்தர தீர்வை காண புதிய சுற்று பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் உயர்மட்டத்தில் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துணை பிரதமர் இஷாக் தார், ராணுவ தளபதி ஆசிம் முனிர் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நாளை (வியாழக்கிழமை) நடைபெறலாம் என்று பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.மேலும் ஈரான் அணு ஆயுதம் வைத்து இருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.டிரம்ப் கூறியதாவது: இப்போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால்கூட, அவர்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகும். நாங்கள் இன்னும் முடிக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஈரானியர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள மிகவும் தீவிரமாக விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஈரானின் திட்டங்களை முறியடிக்க வேண்டிய சூழலில் இருந்தோம். ஈரானின் அணுசக்தித் திறன்களைச் சிதைப்பதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என்று நான் நினைக்கிறேன். ஈரானிடம் அணுசக்தித் திறன் இப்போது இருந்திருந்தால், நாம் அனைவரும் அவர்களை 'சார்' என்றுதான் அழைத்துக் கொண்டிருப்போம்”என்றார்.