அமெரிக்கா, இஸ்ரேலிய கூட்டுப்படைகள், ஈரான் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக அவர்களுக்கு உதவிவரும் வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
குறிப்பாக ஈரான் மற்றும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எண்ணை வளங்கள் தாக்கப்பட்டு உள்ளன. கத்தாரின் ராஸ் லபான் தொழில்துறை நகரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்.பி.ஜி ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
இது உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி மையங்களில் ஒன்று என்பதால் இந்த தாக்குதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எரிசக்தி நெருக்கடி ஏற்படகூடும் என்ற அச்சத்தில் உலகளாவிய நாடுகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், மத்திய கிழக்குப் போரால், உலக கச்சா எண்ணெய் சந்தையில் வரலாறு கண்டிராத மிகப்பெரிய சீர்குலைவு ஏற்படக்கூடும் என சர்வதேச எரிசக்தி முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை இயல்பான நிலைக்கு மீட்டெடுக்க 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேல் ஆகலாம் என்பதால், அனைவரும் தீவிரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.