வாஷிங்டன்,
அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் 40 நாட்கள் நீடித்த நிலையில் கடந்த 7-ந்தேதி 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதில் இருநாடுகள் இடையே பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து ஈரானுக்கு நெருக்கடி தரும் வகையில் ஹார்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டன.
மேலும் ஈரான் நோக்கி பயணித்த சரக்கு கப்பல்களை அமெரிக்கா சிறைபிடித்தது. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருநாடுகளிடையே 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை மேற்கொள்ள பாகிஸ்தான் தீவிரமாக முயற்சி செய்து வரும்நி லையில் தற்காலிக போர் நிறுத்தத்தை கூடுதலாக ஒருநாள், அதாவது இன்றுடன் (புதன்கிழமை) நீடித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் முடிவடைகிற நிலையில் ஈரான் உடனான போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் ஒருங்கிணைந்த அமைதித் திட்டத்தை முன்வைக்கும் வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தாக்குதல் ஒத்திவைக்கப்பட்டாலும், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவது தொடரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்பின் போர்நிறுத்த நீட்டிப்பு முடிவு சர்வதேச நாடுகளிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டித்ததற்காக டிரம்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.
ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது போர் நடவடிக்கை என்றும் மிரட்டல்களை எவ்வாறு எதிர்கொள்வது என ஈரானுக்கு தெரியும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.